Monday, November 2, 2009

ரசவாதம் செய்வது எளிது

 ரசவாதம் செய்வது எளிது

 

ராஜன் நீங்கள் நினைப்பதை போல பணம் ...பணம் ...என அலைபவன் கிடையாது. ஏதோ சின்னவயதில் அவன் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டான் என்பதை தவிர அவனுக்கும் பண கஷ்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. போதை பழக்கம் மற்று சில கெட்ட விஷயங்களுக்கு அவனுக்கு அதிகமாகவே பணம் தேவைப்பட்டது. அவன் நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் செய்வதை பற்றி பேச்சுவந்தது. அனைத்து உலோகத்தையும் தங்கமாக மாற்றம் செய்யும் ரசவாதம் என்ற விஷயம் அவனுக்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது.



ரசவாதம் பற்றிய செய்திகளை சேகரிக்க துங்கினான். உணவு உறக்கம் அவனுக்கு இரண்டாம்பட்சம் ஆகியது. ரசவாதம் செய்வது அவனின் நோக்கம் அல்ல. ரசவாதம் செய்தால் கிடைக்கும் தங்கத்தை கொண்டு ஏழை எளியவர்களை காப்பாற்றலாம் அல்லவா?



நம்புங்கள் அது ஒன்று தான் அவன் நோக்கம். வேறு ஒன்றும் இல்லை.



இவ்வாறு ராஜன் ரசவாதத்திற்கு அலையும்பொழுது தான் ஸ்வாமி திரிலோகானந்தரை பற்றி கேள்விப்பட்டான். ஸ்வாமியின் ஆசிரமத்தில் ரசவாதம் நடப்பதாகவும், ஸ்வாமி ரசவாதம் தெரிந்தவர் என்றும் செய்தியை உறுதி செய்து கொண்டு அவரை சந்திக்க சென்றான்.



திரிலோகானந்தரின் ஆசரமம் முக்கிலி மலை உச்சியில் இருந்தது. முக்கிலி மலை சாதாரண மலை அல்ல. அதன் உச்சிக்கு செல்லுவதற்கு அதிக உடல் பலம் வேண்டும்.



வருடத்திற்கு ஒருமுறைமட்டுமே மலையிலிருந்து கீழே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார் ஸ்வாமி. அவரை அந்த நாளில் சந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து சென்றான் ராஜன்.



அங்கே அவன் கண்ட காட்சி ஆச்சரியத்தை உண்டு செய்தது. பல்லாயிர கணக்கான மக்கள் அங்கு தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.



இந்த ஜன கூட்டத்தில் ரசவாதம் பற்றி பேசமுடியுமா என ராஜனுக்கு சந்தேகம் வந்தது. ஸ்வாமி திரிலோகானந்தாவின் ஆசிரமத்தில் ஊடுருவி ரசவாதத்தை தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்தான் ராஜன்.


ஸ்வாமி திரிலோகானந்தாவின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.



"
ஐயா என்னை உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்".



புன்னகைத்த திரிலோகானந்தர் அவனை மெல்ல எழுப்பி கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளுகிறேன். உனக்காகத்தான் காத்திருந்தேன்" என கூறி அவனை தன்னுடன் இருக்க அனுமதித்தார்.



தனது திட்டம் இவ்வளவு சுலபமாக செயல்படும் என ராஜன் நினைக்கவில்லை. தனது பழக்கங்களை விட்டுவிட்டு சிஷ்யனாக நடிக்கதுவங்கினான்.



முக்கிலி மலையில் ராஜனின் ஆசிரம வாசம் துவங்கியது. தினமும் நீர் மற்றும் உணவுகளை அடிவாரம் சென்று கொண்டுவருவது, ஆசிரம் தகவல்களை வெளியிடுவது என பரபரப்பான செயல்பட்டான் ராஜன். அவன் தனது வாழ்க்கையில் இப்படிபட்ட உடல் உழைப்பு கொண்ட வேலைகளை செய்ததில்லை.



சில மாதங்களிலேயே திரிலோகானந்தாவின் நெருக்கத்தொண்டன் ஆனான் ராஜன். அவனுக்கு ஆன்மீக தீட்சை வழங்கி தன்னருகில் இருக்குமாறு பணிந்தார் குரு.



ராஜன் ஸ்வாமி விஸ்வானந்தரானார்.



காலங்கள் கடந்தது ஸ்வாமி விஸ்வானந்தரின் ரசவாத ஆர்வம் மட்டும் குறையவில்லை. நொடிப்பொழுதும் குருவை விட்டு விலகாமல் இருந்தாலும் அவரின் செய்கையில் இருந்து ரசவாத குறிப்புகளை கண்டறியமுடியவில்லை.



காலங்கள் கடந்தது....



ஸ்வாமி திரிலோகானந்தர் தனது இறுதி காலத்தை எட்டினார்..



அவரின் படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தார் ஸ்வாமி விஸ்வானந்தர்.



தான் இங்கே வந்து பலவருடம் போராடி ரசவாதத்தை அறியமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம், இப்பொழுது கேட்டுவிட வேண்டும் இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணமும் ஸ்வாமி விஸ்வானந்தரிடம் குடி கொண்டிருந்தது.



யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல குருவின் பாதங்களை பற்றி நமஸ்கரித்தவாரே கேட்டான்...



"
குருவே உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்"



"
கேள் விஸ்வா "



"
உங்களிடம் நான் வந்த நோக்கம் தெரியுமா உங்களுக்கு"



"
தெரியும். ரசவாதம் தானே"



ஸ்வாமி விஸ்வானந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தெரிந்தா இவ்வளவு நாள் நம்மை அருகில் வைத்திருந்தார். தன்னை சுதரித்துக் கொண்டு..



"
ஆம் குருவே. நீங்கள் எனக்கு அதை கற்றுக்கொடுப்பீர்களா"



"
எனது அருமை விஸ்வா, ரசவாதம் செய்வது எளிது... பார் ராஜனாக இருந்த இரும்பு துண்டை விஸ்வானந்தா எனும் தங்கமாக மாற்றி இருக்கிறேனே? இது தானப்பா ரசவாதம்...!"



அவனை தீர்க்கமாக பார்த்து புன்னகைத்தவாறே அவரின் ப்ராணன் அவருள் அடங்கியது.

.
அவர் உடலிலிருந்து ஒளி வெளிப்பட்டு விஸ்வானந்தரின் உள்ளே சென்றது.



ஸ்வாமி விஸ்வானந்தாவுக்கு புரியதுவங்கியது.. இரும்பு துண்டுகளை எதிர்நோக்கி காத்திருந்தார்...

 

 

 



Try the new Yahoo! India Homepage. Click here.

No comments: